Tuesday, July 03, 2007

350. கண்டேன் 'சிவாஜி'யை!

ஒரு வழியாக சனிக்கிழமை (30/6/07) சிவாஜி திரைப்படத்தை சத்யம் தியேட்டரில் காண வாய்ப்பு கிடைத்தது. சக தலைவர் ரசிகர்களான ஐகாரஸ் பிரகாஷ¤ம், ரஜினி ராம்கியும் விரிவாக விமர்சனம் எதுவும் எழுதியதாகத் தெரிவில்லை :) ஐகாரஸ் ஓரிண்டு வாக்கியங்களில் ஒரு விமர்சனம் எழுதி, முத்தாய்ப்பாக ஒரு அற்புதமான ஷாட் அடித்திருந்தார்!

Rajnikanth is a phenomenon which cannot be understood by those who didnt watch his movies when they grew up. எவ்வளவு யதார்த்தமான உண்மை!


இணையத்தில், தனிமனித காழ்ப்பு மிக்க விமர்சனங்கள் இறைந்திருந்தன. அது எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதால் ஆச்சரியம் எதுவுமில்லை. என்னவோ, பாமர ஜனங்களை அவர் அடித்துப் பிடுங்குவது போல் ஒரு தோற்றத்தை அவை ஏற்படுத்தின. உண்மையை சொல்லப்போனால், பலதரப்பட்ட மக்களையும் காந்தம் ஓர் கவர்ந்து தன் ரசிகர்களாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்ற ஆளுமை. ஒரு 3 மணி நேரம் நம் கவலைகளை மறக்கடிக்க வல்ல ஒரு சூப்பர் Entertainer ரஜினி !

எனக்கு சட்டென்று மனதில் பட்டது, படம் ரொம்ப நீளம், இரண்டாவது பாகம் இழுவை தான்! 'ரஜினி படம்' என்பதால் மட்டுமே உட்கார முடிந்தது என்பது நிஜம். முதல் பாதி ரஜினி, விவேக் அடிக்கும் லூட்டிகளால் ஜாலியாகப் போனாலும், திரைக்கதையில் தொடர்பு அறுந்து காட்சிகள் சொருகப்பட்டிருப்பது போல் ஒரு தோற்றம்! ஸ்டைல், சண்டை, மிகை/மிகையில்லாத நடிப்பு, காமெடி என்று ரஜினி அனைத்திலும் பின்னிப் பெடலெடுத்து விட்டார்! ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமே! சங்கர் எப்போதும் போல பிரும்மாண்டம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் துணையை நாடியிருந்தாலும், ரஜினி ·பார்முலாவை புரிந்து கொண்டு படமெடுத்திருக்கிறார்.

ரஜினி படத்திற்கு பெரிய அளவில் கதை தேவைப்படுவதில்லை! அவர் ஆளுமையை சரியாக பயன்படுத்த வேண்டும், அதை சங்கர் உருப்படியாகவே செய்திருக்கிறார் என்பது என் கருத்து. சகலத்தையும் இழந்து, மீண்டும் பெரிய ஆளாக ரஜினி உருவெடுப்பதை படையப்பா, அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதனுடன், சங்கரின் "பவர்·புல்" சோஷியல் மெசேஜை (கறுப்புப்பண ஒழிப்பு) கலந்தால், சிவாஜி கதை:) இந்தக் கதை வெளியில் தெரியாமலிருக்கவா, சங்கர் இத்தனை பிரயத்தனப்பட்டார் என்று தோன்றியது நிஜம்! அன்னியன், இந்தியன் அளவு கூட கதை இல்லை, நல்ல வேளை, ரஜினி படத்தை காப்பாற்றி விட்டார்!

படம் முழுக்க ரஜினியுடன் வரும் விவேக், தன் பாணி அறிவுரை எதுவும் வழங்காமல் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அந்த "ஸிக்ஸ்க்கு அப்புறம் செவன்டா, சிவாஜிக்கு அப்புறம் எவன்டா" பஞ்ச் சூப்பர். சூப்பர்ஸ்டார் கனவுகளோடு அலையும் விடலைகளுக்கும், மற்றவர்களுக்கும் புரிந்தால் சரி தான் ;-)

ஷ்ரேயா introduce ஆகும் காட்சியிலேயே ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டேன், ஷ்ரேயாவுக்காக இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று, ஏனெனில், முதல் தடவை பார்ப்பது ரஜினிக்காக மட்டுமே அல்லவா ? அம்மணியின் கண்களைப் பார்த்தால் நடிப்பு வரும் போல் தான் தோன்றுகிறது. ஆனால், எந்த இயக்குனர் அவரை நடிக்க விடுவார் என்ற சந்தேகமும் வருகிறது! கொடுத்த ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார். பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில் தன் முன்/பின் அதிர்வுகளால், நம் மனதில் பல அதிர்வுகளை ஏற்'படுத்துகிறார்'! அதுவும், தன் சிவப்புத் தாவணியை வீசி ஷ்ரேயா ரயிலை நிறுத்தும் காட்சியில் எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்தது!

சுஜாதா வசனங்கள் நறுக்! உதாரணம் 'சாகற நாள் தெரிஞ்சுப் போச்சுன்னா, வாழற நாள் நரகமாயிடும்' வசனம் ! இவ்வளவு புதுமுகங்கள் (ராஜா, உமா பத்மநாபன், சாலமன் பாப்பையா ...) நடிச்ச படத்தில், சுஜாதாவுக்கும் ஒரு சின்ன ரோல் கொடுத்திருக்கலாம் :) வில்லன் சுமன் சுமார் தான், ரகுவரனையே போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

படத்தில் மிகவும் அபத்தமாகப் பட்ட 2 விஷயங்களைச் சொல்கிறேன். கறுப்புப்பணத்தை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று, ஊழல்வாதிகளுக்கு நெருங்கிய ஆட்களை ஒரு இடத்தில் கூட்டி, அவர்களை அடித்து உதைத்து உண்மையை வரவழைப்பதும் (சுஜாதா இருந்தும் இப்படியா ?), இவ்வளவு கண்ணுக்கு ரம்மியமான படத்தில், ஷ்ரேயாவுக்கு அப்பாவாக வரும் ராஜா, ஓரிரு காட்சிகளில் மிக அழுக்கான, வியர்வை சொட்டும் பனியனுடன் தோன்றுவதும் உறுத்தலாக இருந்தது.

திரைப்படத்தில், பலரது (ஒளிப்பதிவாளர் ஆனந்த், ரஹ்மான், பீட்டர் ஹெயின், தோட்டா தரணி, நடன இயக்குனர்கள்) உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. அதற்காக, இவ்வளவு (80 கோடி) செலவழித்திருக்க வேண்டுமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதில் பாதி செலவழித்து இருந்தால் கூட, சிவாஜி மகத்தான வெற்றி பெற்றிருக்கும் என்று திடமாகக் கூற முடியும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 350 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails